ரோஸ் வாட்டர் ரகசியம் - உங்கள் முகம் ஜொலிப்பதற்கு
பெண்களே, உங்கள் முகம் ரோஜா இதழ்களைப் போல அழகாகவும், மென்மையாகவும் மலர வேண்டுமா? அப்படியென்றால் நீங்கள் பயன்படுத்த வேண்டிய ஒரு சிறந்த பொருள், ரோஸ்வாட்டர். ரோஸ்வாட்டர் சருமத்திற்கு நன்றாக ஈரப்பதத்தை அளித்து இயற்கை பளபளப்பை வழங்குகிறது. மேலும் ரோஸ்வாட்டர் சிறந்த நறுமணம் மற்றும் பலன்களைக் கொண்டுள்ளது. இருப்பினும் தரமான ரோஸ்வாட்டரைப் பயன்படுத்தினால் மட்டுமே இந்த அனைத்து பலன்களையும் பெற முடியும்.
நாம் ரோஸ்வாட்டரைத் தினமும் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் டோனர் (Toner) ஆகவும், ஃபேஸ் மிஸ்ட் (Face Mist) ஆகவும், க்ளென்சர் (Cleanser) ஆகவும் தயாரித்து நம் சருமத்தில் பயன்படுத்தும்போது அது நமது முகத்தை சில நிமிடங்களில் புத்துணர்ச்சி பெறச் செய்கிறது.
ரோஸ்வாட்டரை (Rose Water) பயன்படுத்துங்கள், உங்கள் முகம் மலரட்டும்.

ரோஸ்வாட்டரின் பயன்கள் (Rose Water Benefits)
- சரும எரிச்சல் மற்றும் சருமம் சிவந்து போவதைக் குறைக்கிறது
சென்சிடிவ் (Sensitive) சருமம் உள்ளவர்களுக்கு பொதுவாகவே சரும பிரச்சனைகள் அதிகமாக ஏற்படும். வெயிலில் அதிகமாக இருக்கும்போதும் சருமம் சேதமடையும். இது போன்ற பிரச்சனைகளைச் சரிசெய்யும் அழற்சி எதிர்ப்பு (Anti-inflammatory) பொருட்களை ரோஸ்வாட்டர் கொண்டுள்ளது.
- ஈரப்பதம் அளித்தல் மற்றும் pH ஐ சமநிலைப்படுத்துதல்
நமது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கவும், அழுக்குகளை வெளியேற்றவும் நாம் பல பொருட்களைப் பயன்படுத்தி ஸ்க்ரப் செய்யும்போது நம் முகத்தில் சருமத்துளைகள் ஏற்படும். இந்த சருமத்துளைகளுக்குள் அழுக்கு போகும்போது மேலும் நிறைய சரும பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு ரோஸ்வாட்டரைப் பயன்படுத்தும்போது ரோஸ்வாட்டர் மென்மையான ஈரப்பதமூட்டியாக செயல்பட்டு சருமத்துளைகளை இறுகச் செய்து ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவுகிறது. மேலும் சருமத்தின் இயற்கையான pH ஐ பராமரிக்க உதவுகிறது. இது வறண்ட மற்றும் எண்ணெய் பசை சருமத்தைச் சரிசெய்ய உதவுகிறது.
- இளமையைத் தக்கவைத்தல்
ரோஸ்வாட்டரில் வைட்டமின் A, வைட்டமின் C மற்றும் வைட்டமின் E ஆகியவை இருப்பதால் இது சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி உங்களுக்கு இளமையான தோற்றத்தை வழங்குகிறது.
- இயற்கையான டோனர் (Natural Toner)
ரோஸ்வாட்டரை ஒரு டோனராக உபயோகிக்கும்போது, அது மென்மையான முறையில் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்கு ஆகியவற்றை நீக்கி சருமத்துளைகளை இறுகச் செய்து பளபளப்பான சருமத்தை அளிக்கிறது.
- முகப்பரு (Pimples) மற்றும் பாக்டீரியாவை எதிர்க்கிறது
ரோஸ்வாட்டரில் லேசான கிருமிநாசினி (Antiseptic) பண்பு இருப்பதால் இது முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழித்து முகப்பருக்கள் வராமல் தடுக்க உதவுகிறது.
ரோஸ்வாட்டரைப் பயன்படுத்தும் முறைகள் (How to Use Rose Water)

- ரோஸ்வாட்டர் டோனர் (Rose Water Toner)
ரோஸ்வாட்டர் டோனர் தயாரிக்க ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் 100ml ரோஸ்வாட்டர், 90ml கற்றாழை ஜெல் மற்றும் 30ml விட்ச் ஹேசல் (Witch Hazel) மூன்றையும் சேர்த்து நன்றாக குலுக்கவும். இந்த டோனரைக் காலை, இரவு என இருவேளை சருமத்தில் பயன்படுத்தும்போது சருமத்தில் உள்ள பிரச்சனைகளைச் சரிசெய்து இயற்கையான பளபளப்பை அளிக்கிறது. இது எல்லா வகையான சருமத்திற்கும் சிறந்தது.
- ரோஸ்வாட்டர் மற்றும் கிளிசரின் மிஸ்ட் (Rose Water with Glycerin Mist)
உங்கள் முகம் குளிர்காலங்களில் வறண்டு பொலிவிழந்து காணப்படும். இதனைச் சரிசெய்ய ஒரு பாட்டிலில் 3 டேபிள் ஸ்பூன் ரோஸ்வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் காய்கறியிலிருந்து தயாரிக்கப்படும் கிளிசரின் சேர்த்துக் கலந்து ரோஸ்வாட்டர் மிஸ்ட்டைத் தயார் செய்து உடனடி புத்துணர்ச்சிக்காக உங்கள் முகத்தில் தெளிக்கலாம். இது வறண்ட சருமத்திற்கு ஏற்றதாக உள்ளது.
- ரோஸ்வாட்டர் மற்றும் தேன் (Rose Water with Honey)
உங்கள் சருமத்தை ரோஜா இதழ்களைப் போல மென்மையாக மாற்றுவதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் ரோஸ்வாட்டர் இரண்டையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுவதன் மூலம் மென்மையான சருமத்தைப் பெறலாம். இது சென்சிடிவ் மற்றும் பருக்கள் நிறைந்த சருமத்திற்கும் நல்ல பலனை அளிக்கிறது.
- வீங்கிய கண்களைச் சரிசெய்தல் (Rose Water for Puffy Eyes)
தூக்கமின்மை, அலர்ஜி, சரியாகத் தண்ணீர் குடிக்காமல் இருத்தல் போன்ற காரணங்களால் கண்வீக்கம் ஏற்படுகிறது. இதனைச் சரிசெய்ய ரோஸ்வாட்டரைச் சிறிது நேரம் குளிர வைத்து, பின் அதனைக் காட்டன் பஞ்சில் தோய்த்து கண்களை மூடி அதன் மீது 10 நிமிடங்கள் வைத்திருந்தால் கண்வீக்கம் குறையும்.
- ரோஸ்வாட்டர் மற்றும் கற்றாழை ஜெல் (Rose Water with Aloe Vera)
நாம் வெயிலில் செல்லும்போது நமது சருமம் வெயிலின் வெப்பத்தால் பாதிக்கப்பட்டு எரிச்சல் மற்றும் சருமம் சிவந்துபோதல் போன்ற சரும பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதனைச் சரிசெய்ய 1 டேபிள் ஸ்பூன் ரோஸ்வாட்டர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை ஒன்றாகக் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்துக் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் சரும எரிச்சல் படிப்படியாகக் குறையும்.
- சிறந்த மேக்கப் ரிமூவர் (Rose Water Makeup Remover)
ரோஸ்வாட்டரில் ஒரு காட்டன் பஞ்சினை ஊறவைத்து அதனுடன் சில துளிகள் தேங்காய் எண்ணெய் சேர்த்து மேக்கப்பை நீக்கும்போது இது சருமத்தில் எந்தவித எரிச்சலையும் ஏற்படுத்தாமல் மிகவும் எளிதாக மேக்கப்பை நீக்குகிறது.
- ரோஸ்வாட்டர் மற்றும் ஓட்ஸ் ஸ்க்ரப் (Rose Water with Oats Scrub)
நாம் வெளியே சென்று வரும்போது சுற்றியுள்ள தூசு மற்றும் அழுக்குகள் நம் சருமத்துளைகளுக்குள் சென்று அடைத்து முகப்பருவை ஏற்படுத்துகிறது. முகத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற இந்த ரோஸ்வாட்டர் ஓட்ஸ் ஸ்க்ரப்பைப் பயன்படுத்தவும். இதற்கு 1 டேபிள் ஸ்பூன் ஊறவைத்து அரைத்த ஓட்ஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ்வாட்டர் இரண்டையும் கலந்து முகத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்துக் கழுவும்போது மென்மையான சருமத்தைப் பெறலாம்.
- ரோஸ்வாட்டர் மற்றும் க்ரீன் டீ (Rose Water with Green Tea)
ரோஸ்வாட்டர் மற்றும் க்ரீன் டீயை ஒன்றாகக் கலந்து ஐஸ்கட்டியாக உறைய வைத்து முகத்தில் பயன்படுத்தும்போது முகத்தில் பல்வேறு காரணங்களால் ஏற்படும் திறந்த துளைகளைச் சரிசெய்கிறது. மேலும் வெயிலால் சருமத்தில் ஏற்படும் கருமையைச் சரிசெய்து முகத்தின் நிறத்தைச் சீராக மாற்றுகிறது.
ரோஸ்வாட்டர் வீட்டிலேயே எவ்வாறு தயாரிப்பது? (Homemade Rose Water)
ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும். அதன் நடுவில் ஒரு சிறிய கிண்ணத்தை வைக்கவும். பின்பு அந்த பெரிய பாத்திரத்தில் கிண்ணத்தைச் சுற்றி 2 கப் அளவு ரோஜா இதழ்களைப் போடவும். அந்த ரோஜா இதழுடன் 200 மிலி தண்ணீரைச் சேர்க்கவும். அந்த பெரிய பாத்திரத்தை ஒரு மூடியால் மூடி சூடுபடுத்தவும். இப்பொழுது அதிலிருக்கும் தண்ணீர் கொதித்து அதிலிருந்து வரும் நீராவி மூடியில் படும். பின்பு மூடியின் மேலே சில ஐஸ்கட்டிகளை வைப்பதன் மூலம் அந்த நீராவி குளிர்ந்து கிண்ணத்தில் விழும். இவ்வாறு மிதமான சூட்டில் 45 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இப்பொழுது ரோஸ்வாட்டர் கிண்ணத்தில் சேமிக்கப்படும். இதனைக் குளிர வைத்து சுத்தமான கண்ணாடி பாத்திரத்தில் வைக்கவும். இதனைக் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து 3-4 வாரங்கள் பயன்படுத்தலாம்.
முடிவுரை
ரோஸ்வாட்டர் என்பது எளிமையான, இயற்கையான மற்றும் பல்வேறு பயன்களைக் கொண்ட ஒரு சிறந்த சரும பராமரிப்புப் பொருள் ஆகும். இது சருமத்திற்கு ஈரப்பதம் அளிப்பது முதல் முகப்பருவை எதிர்ப்பது வரை பல நன்மைகளைத் தருகிறது. தரமான ரோஸ்வாட்டரை வாங்கிப் பயன்படுத்துவது அல்லது வீட்டிலேயே தயாரித்துப் பயன்படுத்துவது சிறந்தது. தினமும் ரோஸ்வாட்டரை உங்கள் சரும பராமரிப்பில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்தைப் பெறலாம்.